×

மின்வாரிய தலைமை அலுவலகம் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: தமிழக மின்வாரிய காலிப் பணியிடங்களுக்கு உரிய தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்போது நிரப்பப்படுகின்றனர். அந்த வகையில், மின் வாரியத்தில் ‘கேங்மேன்’ எனப்படும் களப்பணியாளர்கள் பணியிடத்துக்கான எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 15,000 பேர் பங்கேற்றனர். இதில், பெரும்பாலானவர்களுக்கு பணி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 5,400 பேருக்கு பணிவழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கக் கோரி சென்னை கொளத்தூரில் நேற்று முன்தினம் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து நேற்று அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முற்பட்ட போது அதில் 2 பேர் கையில் டீசல் கேன்களுடன் திடீரென அண்ணா சாலை மின்வாரிய அலுவலகம் முன் வந்தனர். அவர்கள் தலையில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட திரண்ட அனைவரையும் போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். இதன் காரணமாக மின்வாரிய அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மின்வாரிய தலைமை அலுவலகம் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Electrical Kalib Workplaces ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...